”முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் செல்லும் விவகாரம் தொடர்பில் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது” என மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட (செயலாற்றல்) இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண பதில் பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களை ஏ9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது செல்வதால் பாடசாலை செல்லவும் மீண்டும் பாடசாலையில் இருந்து வீடு வரவும் மிகவும் சிரமப்படுகின்றனர் எனவும் பல்வேறு தரப்பினருக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என ஊடகங்களில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே இவ்விடயம் தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண பதில் பிராந்திய முகாமையாளர் தெரிவித்ததாவது, ‘‘நேற்று (3.05.2023) பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் ஏற்றாமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வருகை தந்து இந்த விடயம் தொடர்பான விளக்கத்தை வழங்கினோம்.
பாடசாலை மாணவர்களை ஏற்றவேண்டியது கட்டாயம் என்பதனால் அவர்களை கட்டாயம் ஏற்ற வேண்டும்.
வடமாகாணத்துக்கு உட்பட்ட சகல சாலை முகாமையாளர்களுக்கும் ஏற்கனவே உரிய அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளோம்.அதைவிட வெளி மாகாணங்களில் இருந்து வருகின்ற பேருந்துகள் ஏற்றவேண்டும் என சம்மந்தப்பட்ட பேருந்துகளின் பிராந்தியத்துக்கு பொறுப்பானவர்களுக்கு அறிவித்திருந்த போதும் சில பேருந்துகள் மாணவர்களை ஏற்றாது செல்வது தொடர்பில் முறைப்பாடுகள் தொடர்ந்து கிடைத்தவண்ணமிருந்தது.
நேற்று முன்தினம் (2.05.2023) நாங்கள் நேரடியாக சென்று பேருந்துகள் ஏற்றாது செல்வது தொடர்பாக பார்வையிட்டு அறிக்கைகளை தயாரித்துள்ளோம். அங்கு மாணவர்களை ஏற்றாது சென்ற பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான கொழும்பு பேருந்துக்கு சாலை முகாமையாளருக்கு அறிவித்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதேபோல் வெளி மாகாண பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை தலைவருக்கு அறிவித்து அவர்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது உரிய நடவடிக்கைகள் நாங்கள் மேற்கொள்வோம்‘‘ என்று தெரிவித்துள்ளார்.