மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது, களுதாவளை கிராம ஆலயங்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய சர்வதேச மகளிர் தின பிரதான நிகழ்வானது, பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையின் கீழ் களுதாவளை பிள்ளையார் ஆலய முன் வீதி வளாகத்தில் நேற்றைய தினம் (2024.03.20) மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
“அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்” எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் இவ்வருடத்திற்கான மகளிர் தின நிகழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமாகிய திருமதி. ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
பிரதான நிகழ்வினையொட்டியதாக காலை 9 மணி முதல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு இடம்பெற்றதுடன், ஓவிய காட்சிப்படுத்தலும், பிரதி விம்ப ஓவியம் வரைதல் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச கலைஞர்களினால் பாடல், நடனம் மற்றும் நாடகம் என்பன ஆற்றுகை செய்யப்பட்டதுடன், களுவையூர் கலைக்கழகத்தினால் சரித்திர மங்கையரின் சமூக செய்தி எனும் தலைப்பிலான இயலும், இசையும் நிகழ்வானது ஆற்றுகை செய்யப்பட்டது.
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கலைஞர்கள் பங்குகொண்ட “தற்கால மகளிருக்காய் ….” எனும் தலைப்பிலான கருத்தாடல் களமானது அனைவரினதும் வரவேற்பை பெற்றது.
இந்த நிகழ்வானது பட்டிருப்பு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி வனிதா சுரேஸ் அவர்களினால் தொகுத்து வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரதேச செயலக பிரிவிலிருந்து சிறந்த பெண் தொழில் முயற்சியாளர், நடன கலை, பாரம்பரிய மருத்துவிச்சி, விளையாட்டு சாதனையாளர், சிறந்த பெண் தலைமை மாதர், மாற்றுத்திறனாளி விளையாட்டு சாதனையாளர் எனும் துறைகளின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாண்புறு மங்கையர் கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், களுதாவளை கிராம ஆலயங்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்