காரை வாங்குவதற்கு முன் சோதனை ஓட்டம் நடத்துவதாக கூறி, காரை திருடிச் சென்ற ஒருவர் ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை ஹொரணையில் உள்ள மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் தனது காரை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்த நிலையில் 3.3 மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த காரை கொள்வனவு செய்ய வந்த நபர் ஒருவர் அதனை வாங்குவதற்கு முன்னர் சோதனை ஓட்டத்திற்கு செல்வதாக கூறி எடுத்துச் சென்றுள்ளார்.
நான்கு நாட்களுக்குப் பின்னர் வாத்துவ, வேரகம என்ற இடத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக ஹொரண தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
வழித்தடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி, சந்தேக நபர் காரை கொள்வனவு செய்யும் போர்வையில் வந்து, அதனைப் பரிசோதிப்பதாகக் கூறி, ஹொரணை – கனன்வில வீதியில், மென்பொறியாளரையும் காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
மயானம் அருகே காரை நிறுத்திவிட்டு என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, அந்த நபர் திடீரென பிரேக்கை அழுத்தி காரை நிறுத்தினார். அப்போது, சந்தேகநபர் காரை பரிசோதிப்பதை போல பாசாங்கு செய்துள்ளாார்.
காரின் உரிமையாளர், பயணிகள் இருக்கை கதவை திறந்து, காரை விட்டு இறங்கி, இன்ஜினை நோக்கி சென்றுள்ளார். சாரதி ஆசனத்தில் இருந்த சந்தேக நபர் திடீரென காரை தனது பக்கம் திருப்பிய அதேவேளை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், ஹொரணை – கானன்விலவில் இருந்து வாதுவ வரையான சுமார் 20 சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு, சந்தேக நபர் காரில் சென்ற பாதை அடையாளம் காணப்பட்டுள்ளது.
சந்தேகநபர் காருடன் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் ஜீவாதாரத்திற்காக கார்களை பழுதுபார்ப்பவர் எனவும், இந்த சம்பவத்திற்கு முன்னர் எந்தவொரு திருட்டுச் சம்பவத்திலும் பொலிஸாரிடம் சிக்கவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.