இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸின் மனைவியான இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவர் பொது வெளியில் தோன்றவில்லை.
இதனால் அவரது உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர் கேத் மிடில்டன், தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. ஆனால், அந்த புகைப்படம் திருத்தியமைக்கப்பட்ட புகைப்படம் என சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில், கேத் மிடில்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் கேத் மிடில்டன் உறுதி செய்துள்ளார்.
இலண்டனில் ஒரு மருத்துவமனையில் வயிற்றில் தனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பிறகான சோதனையில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக கேத் மிடில்டன் அதில் கூறியுள்ளார்.
கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவக் குழு அறிவுறுத்தியதன் காரணமாக, தற்போது ஆரம்ப கட்ட சிகிச்சைகளை பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
குடும்பத்தின் நலன் கருதி இவ்விடயத்தை வௌிப்படையாக தெரிவிக்காமல் இருந்ததாக கூறியுள்ள கேத் மிடில்டன், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தனக்கும் தனது கணவருக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு அதிலிருந்து மீண்டு வர தனக்கு நேரம் எடுத்தது. அதன் பிறகே இந்த சிகிச்சையை தொடங்க முடிந்தது என குறிப்பிட்டுள்ள கேத் மிடில்டன், நோயிலிருந்து மீண்டு வரும் விடயங்களில் தற்போது கவனம் செலுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.
அவருக்கு எத்தகைய புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனும் முழு விபரம் வெளியாகவில்லை.
அதேசமயம் இங்கிலாந்து மன்னரும், மிடில்டனின் மாமனாருமான சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.