மட்டக்களப்பில் ஈஸ்டர் தினத்தையிட்டு தேவாலயங்களில் பொலிசாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நகரிலுள்ள தாண்டவன்வெளி மாதா தேவாலயத்தின் உள்ள உண்டியலை உடைத்து அங்கிருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம் சனிக்கிழமை நள்ளிரவு (30) இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் தாண்டவன்வெளியில் அமைந்துள்ள இந்த தேவாலயத்தில் சம்பவதினமான சனிக்கிழமை (30) ஈஸ்டர் விசேட ஆராதனை நள்ளிரவு இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு பொலிசார் பலத்த பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் விசேட ஆராதனை நள்ளிரவு 12 மணிக்கு முடிவுற்ற போது அங்கிருந்து பொலிசார் வெளியேறியுள்ள நிலையில் தேவாலயத்தின் அருகில் வீதியோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதா சிலைக்கு முன்பாக அமைந்துள்ள இரும்பிலான உண்டியலை உடைத்து அங்கிருந்த பணம் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
அதேவேளை இச் சம்பவம் தொடர்பாக மட்டு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.