புத்தளம் மதுரங்குளி – முக்குத்தொடுவாய் பிரதேசத்தில் உள்ள இலங்கை ஆசிரியர் தொழிற் சங்க உறுப்பினர் ஒருவரின் வீடு மற்றும் அவரின் சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கோரி இன்று மதுரங்குளி – தொடுவாய் பிரதான வீதியை மக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மதுரங்குளி தொடுவா பகுதியில் இயங்கி வரும் செமன் தொழிற்சாலை காரணமாக தமது பிரதேசத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த தொழிற்சாலையை சட்டரீதியான முறையில் முன்னெடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் தொழிற் சங்க உறுப்பினர் தலைமையில் சிலர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையிலேயே, இலங்கை ஆசிரியர் தொழிற் சங்க உறுப்பினரின் வாகனம் உள்ளிட்ட சொத்துக்கள் சில காடையர் குழுவினரால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை கண்டித்தும், சந்தேக நபர்களை கைது செய்ய கோரியும் மதுரங்குளி – தொடுவா பிரதான வீதியை மறைத்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கோஷங்களை எழுப்பியும் சுலோகங்களை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் , இலங்கை ஆசிரியர் தொழிற் சங்க உறுப்பினரின் வீடு மற்றும் அவரின் சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 06 சந்தேக நபர்கள் மதுரங்குளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.