கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 6 பேர் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பொலிஸ் குழுக்கள் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பயங்கரவாதிகள் இலங்கைக்குள் புகுந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து இலங்கை வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் இன்று (03) கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருப்பதாக இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததனையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து எச்சரிக்கை வந்ததாகவும் இதனால் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் சோதனை நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
UL 122 என்ற விமானம் இன்று காலை 11.59 மணியளவில் கொழும்பில் தரையிறங்கியது. விமானத்தில் இருப்பதாக நம்பப்படும் சந்தேக நபர் ஒருவர் குறித்து சென்னை கட்டுப்பாட்டு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆய்வுக்குப் பிறகு விமானம் விடுவிக்கப்பட்டதை விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது. எனினும் சிங்கப்பூருக்குச் செல்லவிருந்த அடுத்த விமானமான UL 308, பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக தாமதமாகியுள்ளது.