முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதிப்புரட்சி மேற்கொள்ளப்படவில்லை என சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அரகலய போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மறைகரமொன்று இயங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டுமெனவும், விசாரணைக் குழுவொன்றை நியமித்து விசாரணை செய்ய வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
எனினும், கோட்டாபயவிற்கு எதிராக சூழ்ச்சி செய்யப்படவில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
சூழ்ச்சி இடம்பெற்றமைக்கான எந்தவொரு ஆதாரங்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் அதிருப்தியில் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், நாடாளுமன்றையும் முற்றுகையிட முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இதற்க்கு முன்னர் கோட்டாபய ‘ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை அகற்றுவதற்கான சதி’ எனும் தலைப்பில் புத்தகம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.