தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பானது (NEPF) இலங்கையின் நீண்டகால இலவசக் கல்வியின் பாரம்பரியத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில்,
“பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) என்ற வகையில், இலங்கை அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பை (NEPF 2023-2033) நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
கல்விக்கான ஒதுக்கீடு
இது நமது நாட்டின் நீண்டகால இலவசக் கல்வி பாரம்பரியத்திற்குக் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது.
கல்வியில் அரசின் பொறுப்பைத் திரும்பப் பெறுதல், அரச கல்விக்கான ஒதுக்கீடுகளைக் கைவிடுதல், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை (UGC) ஒழித்தல் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி NEPF திட்டம் கல்வி முறையை முழுவதுமாக இலாபம் ஈட்டும் வணிகமாக மாற்றுகிறது.
இந்த சீர்திருத்தங்கள் கல்வியின் தரம் மற்றும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நலனை விட இலாபத்தை முதன்மைப்படுத்துகின்றன.
பல்கலைக்கழக மட்டத்தில் கட்டண விதிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், உயர்கல்விக்கான அரச நிதியை திரும்பப் பெறுவதன் மூலமும், சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையின் சமூக கட்டமைப்பில் மையமாக இருந்த கல்விக்கான சம அணுகல் கொள்கையை NEPF குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
மேலும், NEPF இன் பொருளாதாரம் சார்ந்த பாடங்கள் மற்றும் டிஜிட்டல் மீது கவனம் செலுத்துகிறது, கல்வியறிவு விமர்சன சிந்தனை மற்றும் குடியுரிமை போன்ற கல்வியின் பரந்த இலக்குகளைப் புறக்கணிக்கிறது.
கல்விக்கான நியாயமான அணுகல்
மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்துகிறது. இந்த குறுகிய அணுகுமுறை தற்போதுள்ள வர்க்கப்பிளவுகளை ஆழப்படுத்தவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்த கூடிய வகையிலும் அச்சுறுத்துகிறது.
முன்மொழியப்பட்ட கட்டமைப்பானது, கல்விக்கான நியாயமான அணுகல் மற்றும் கல்வியின் தரத்தை ஒழுங்குபடுத்தல் மற்றும் பேணுதல் ஆகியவற்றிற்கான பொறுப்பை வழங்குவதற்கான பல்வேறு உடன்படிக்கைகளுக்கு இலங்கையின் சர்வதேச கடமைகளை மீறுகிறது.
மாறாக, முன்மொழியப்பட்ட கொள்கையானது இலவச கல்வியின் முற்றுப்புள்ளியாக செயற்படும். மக்களின் செலுத்தும் திறனை பொருட்படுத்தாமல் குடிமக்கள் என்ற வகையில் பெறுவதற்கான உரிமையை பறிக்கிறது.
NEPF நிர்வாகம், நிதி, தர உத்தரவாதம் ஆகியவற்றில் அரசின் பங்கை கடுமையாக மாற்றுகிறது. இந்த சவால்களுக்கு விடையிருக்கும் வகையில் FUTA, NEPF க்கான எதிர்ப்பைத் திரட்டி, இலங்கையில் இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்காக மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட பிற பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படும்.
அரசாங்கம் தனது முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களைத் திரும்பப் பெறவும், சந்தை சக்திகளை விட மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
FUTA, சமூகத்தின் அனைத்து ஒத்த எண்ணம் கொண்ட பிரிவுகளுடன் சேர்ந்து, தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கும். இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்காக நாங்கள் தொடர்ந்து வாதிடுகையில், இந்த முக்கியமான போராட்டத்தில் எங்களுடன் சேருமாறு அனைத்து குடிமக்களையும் அழைக்கிறோம்.
அனைத்து இலங்கையர்களும் அவர்களின் பின்னணி மற்றும் சமூகப் பொருளாதார நிலைகளைக் கடந்து, எல்லோரும் சேர்ந்து கல்வி அடிப்படை உரிமையாக இருப்பதை உறுதி செய்யலாம்.
இறுதியாக, கல்வி போன்ற இன்றியமையாத விடையங்களின் கொள்கை வகுப்பதை ஜனநாயகத்தின் கேலிக்கூத்தாக மாறவிடக்கூடாது என்பதை வலியுறுத்தி, இந்த திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று FUTA கடுமையாகக் கோருகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.