பெங்களூரு: நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக ரத்த பூஜை மேற்கொண்டபோது இளைஞர் ஒருவர் விரலை வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் கார்வார் அருகிலுள்ள சோனார்வாடேவைச் சேர்ந்தவர் அருண் வெர்னேகர் (29). நகைக் கடை நடத்திவரும் இவர், பாஜகவின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, நரேந்திர மோடியை பிரதமர் ஆக தேர்ந்தெடுக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதினார். இந்தக் கடிதம் அப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. கடந்த 2020-ம் ஆண்டு தனது வீட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் கட்டி, சிறிய மார்பளவு சிலை வைத்துள்ளார். அங்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படத்தையும் வைத்து, அவ்வப்போது பூஜை செய்துவருகிறார்.
இந்நிலையில் அருண் வெர்னேகர் கடந்த 6-ம் தேதி நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக காளிக்கு சிறப்பு ரத்த பூஜை மேற்கொண்டார். அப்போது கை விரலை வெட்டி ரத்தம் சேகரிக்க முயன்றார். ஆனால் தவறுதலாக விரலின் முன் பகுதியை முழுவதுமாக வெட்டிக்கொண்டதால், விரல் துண்டானது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக துண்டான பகுதியுடன் மருத்துவமனைக்கு விரைந்தார். ஆனால் மருத்துவர்கள் அதனை மீண்டும் இணைக்க முடியாது எனக் கூறிவிட்டனர். இதனால் வருத்தம் அடைந்துள்ள அருண் வெர்னேகர், “நான் சிறிதளவு ரத்தம் சேகரிக்க முயன்றேன். நான் நினைத்ததை விட அதிகமாக வெட்டிக் கொண்டேன். அந்த விரலை மோடி பிரதமர் ஆக, காளி அம்மனுக்கு பலி கொடுத்ததாக நினைத்துக்கொள்கிறேன்” என்றார்