இம் மாதம் பிறக்கவிருக்கும் குரோதி புது வருட பிறப்பு தொடர்பில் பொது மக்களிடையே சில குழப்பங்கள் காணப்படுவதாக கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றியம் மட்டு ஊடக அமையத்தில் கலந்து கொண்டு விளக்கமளிக்கையில்,
எதிர் வருகின்ற 13.04.2024 சனிக்கிழமை பிற்பகல் 4.15 மணியளவில் விசு புண்ணிய காலம் ஆரம்பமாகி நள்ளிரவு 12.15 மணியளவில் புண்ணிய காலம் நிறைவு பெறுகின்றது.
13.04.2024 சனிக்கிழமை 8.15 மணியளவில் இந்த புதிய குரோதி புது வருடமானது பிறக்கின்றது. எனவே அடியார்களே இந்த வருடத்திலே நீங்கள் யாவரும் ஆலய ஒழுங்கமைப்பிற்கு அமைவாக சங்கமித்து மருத்து நீர் தேய்த்து , ஸ்நானம் செய்து, ஆலய தரிசனம் செய்து குரு, பெற்றார், மங்கள பொருட்களை தரிசனம் செய்து, அந்த வருட பிறப்பினுடைய பலா பலன்களை கேட்டு அறிந்து நல்லவர்களாக வாழ்வீர்களாக.
காலிலே ஆலமிலையும் தலையிலே புங்கமிலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து கொள்ள வேண்டும். மருத்து நீர் தேய்த்து கொள்ள வேண்டிய திசையானது கிழக்கு அல்லது வடக்காக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
திருவாதிரை, மிருகசீரிடம், விசாகம், கேட்டை, அனுஷம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் காட்டாயம் மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து ஆலய தரிசனம் செய்ய வேண்டும்.
இலங்கையிலே வெளியிடப்படும் 2 பஞ்சாங்கங்களின் அடிப்படையிலும், சனிக்கிழமை இரவே இந்த வருட பிறப்பு பிறக்கின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையிலே கிழக்கிலங்கையில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் இந்த வருடப்பிறப்பு பூசையானது இரவு 8.15 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அதேசமயம் மறுநாள் காலை வழமை போல அனைவரும் ஆலய தரிசனம் செய்யலாம் எனவும் மேலும் தெரிவித்தனர்.