வாகரை பிரதேசத்தில் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கண்டரியும் முகமாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு அபிவிருத்தி குழுத் தலைவரும் வெளிநாட்டு வெளிவிவகார பிரதி அமைச்சருமான அருன் கேமச்சந்திர நேற்று முன்தினம் (21) வாகரைக்கு நேரில் வருகை தந்து மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.
இதன்போது கல்குடா தொகுதிக்கான தேசிய மக்கள் சக்தியின் இணப்பாளரும் வங்கி நிதி குழு உறுப்பினருமான க.திலிப்குமாரும் அவருடன் பிரசன்னமாயிருந்தார்.
கதிரவெளி, பால்சேனை மற்றும் காயான்கேணி ஆகிய கிராமங்களில் மேற்படி மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றன.

அங்கு வருகை தந்த மக்கள் தாங்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதாரம் போன்ற விடயங்கள் தொடர்பாக பிரதி அமைச்சரின் கவனத்திற்கு தெரியப்படுத்தினார்கள்.
அதிலும் குறிப்பாக கதிரவெளி புதூர் கிராமத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் நீண்டகாலமாக சுத்தமான குடிநீர் இன்றி துன்பப்படுவதாக கோரிக்கை முன்வைத்தனர். உள் வீதிகள் புணர்தாருனம் செய்யப்படாமல் உள்ளமை, வெள்ள காலங்களில் வெள்ள நீரானது மயானப் பகுதிக்குள் வழிநிதோடுவதனால் உடல்களை அடக்கம் செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் தெரிவித்தனர்.
தாங்கள் நீண்டகாலமாக குடியிருந்து சேனைப் பயிர் செய்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த காணிகளை விட்டு வெளியேறுமாறு வன இலாகா திணைக்கள அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் வீதி பிரச்சினை அத்துடன் இல்மனைட் அகழ்வு விடயம் தொடர்பாகவும் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

அத்துடன் உள்ளுராட்சி மன்றங்களினால் மேற்கொள்ளவேண்டிய மக்கள் சார்ந்த பணிகள் தொடர்பாகவும் விண்ணப்பம் முன்வைத்தனர். மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பல சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அமைச்சிள் செயலாளருக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தீர்வினை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்hhர்.
உடனடியாக தீர்வு காணப்படாத விடயங்களுக்கு அபிவிருத்தி குழுவூடாக கலந்துரையாடி தீர்வினை பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அத்துடன் இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் வாகரை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஊழலற்ற பிரதேச சபையை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க முன்வருமாறு கேட்டுக்கொண்டார்.






