பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும் ஆய்வு சரி என்றால் திட்டம் அசுர வேகத்தில் செயல்படுத்தப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (11)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு – இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்விற்கான ஆய்வு பணிக்காக 12 துறை சார்ந்தவர்களை அழைத்துக் கொண்டு சென்றேன்.
கட்சி அரசியலுக்காக மது போதையில் நின்ற சிலர் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாட விடாமல் எம்மை தடுத்தனர்.
ஆனால் சில ஊடகங்களும் முகநூல் போராளிகளும் போராட்டத்திற்கு அஞ்சி டக்ளஸ் தேவானந்தா மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டார் என கூறியதை அவதானித்தேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்னை பல தடவைகள் கொலை செய்வதற்கு முயன்றார் ஆனாலும் முயற்சிகள் தோற்றுப் போயின.
சகோதர படுகொலைகளை செய்து என்னை தன் பக்கம் இழுக்கலாம் என கணக்கு போட்டார் அதுவும் பிழைத்துவிட்டது.
மக்களுக்கான அபிவிருத்தி திட்டம் – அன்றைய காலகட்டங்களில் பிரபாகரனால் முடியாததை சில மது போதையர்கள் செய்து விடலாம் என எண்ணிவிடக் கூடாது.
எழுபத்தைந்து கள்ள வாக்கு போட்ட தலைவரின் அடியாள் கந்துவெட்டி ஜீவன் போராட்டத்திற்கு மதுபானம் வழங்கி சிலரை அழைத்து வந்தார்.
இவர்களின் ஆட்சியில் என்ன செய்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் கொரோனா காலத்தில் இரும்புக் கேடர்களை களவாடி விற்றதில் இவருக்கும் பங்கு உள்ளது.
இப்படியான சிலர் பொன்னாவெளியில் செய்த விதண்டாவாத தடைகளை உடைத்துக் கொண்டு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பேன் ஆனால் சில தகவல்கள் எனக்கு கிடைப்பதற்கு தாமதமாகிவிட்டன.
அன்றைக்கு நான் ஒன்றைக் கூறிவந்தேன் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை யாரும் தடுக்க முடியாது மீண்டும் இந்த இடத்துக்கு வருவேன் என கூறி வந்தேன் அது விரைவில் நடக்கும்.
அகழ்வு இடம்பெறும் பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு திட்டம் இறால் வளர்ப்பு மற்றும் உவர் நீரை நன்னீராக்கும் திட்டம் என்பன நிறுவனத்தினால் ஏற்படுத்தப்படும் அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு நேற்று இன்று ஆராயப்பட்ட திட்டம் அல்ல வடக்கு மாகாண சபை காலத்திலும் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் இதற்கான திட்டங்கள் பேசு பொருளாக இருந்தது.
ஆகவே மக்கள் அபிவிருத்திக்கும் நாட்டு அபிவிருத்திக்குமான திட்டங்களை யாராலும் தடுக்க முடியாததோடு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கைகள் கிடைத்ததும் அசுர வேகத்தில் திட்டம் செயற்படுத்தப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.