ஈரான் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது இரான் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவில் உள்ள அதன் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோன்யோ குட்டரெஸ், “பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பின் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்” இருப்பதாகக் கூறியுள்ளார்.
சுமார் 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஈரானால் ஏவப்பட்டதாகவும், சில ஏவுகணைகள் இராக் மற்றும் ஏமனில் இருந்து வந்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. ஊடகங்களிடம் பேசிய இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, நள்ளிரவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் ஈராக் மற்றும் ஏமனிலிருந்து வந்ததாகத் தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது போர்க்கால அமைச்சரவையைக் கூட்டினார். மேலும், தாக்குதலை எதிர்கொள்ள நாட்டின் “தற்காப்பு அமைப்புகள்” பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஏப்ரல் 1 ஆம் தேதி சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீதான தாக்குதலில் இரண்டு மூத்த இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டிய ஈரான், அதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று கூறியது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு முதல் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி ஈரான் தாக்குதல் தொடுத்துள்ளது.
இது பழைய பகையின் சமீபத்திய அத்தியாயம்!
இஸ்ரேலும் ஈரானும் பல ஆண்டுகளாக இரத்தக்களரி போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் தீவிரம் புவிசார் அரசியல் சூழ்நிலையை பொறுத்து மாறுபடும். மத்திய கிழக்கில் ஸ்திரமின்மைக்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக இவ்விவகாரம் மாறியுள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கூட்டாளியான “சிறிய சாத்தான்” என்றுதான் இஸ்ரேலை ஈரான் ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். மேலும், அமெரிக்காவை “பெரிய சாத்தான்” என்றும் அவர்கள் அழைக்கிறார்கள்.
ஈரான் “பயங்கரவாத” குழுக்களுக்கு நிதியுதவி செய்வதாகவும், அயத்துல்லாக்களின் யூத-விரோதத்தால் தூண்டப்பட்டு தனது நலன்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்துவதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.
“பரம விரோதிகளுக்கு” இடையேயான போட்டியில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த உயிரிழப்புகள், எந்த அரசாங்கமும் பொறுப்பேற்காத இரகசிய நடவடிக்கைகளின் விளைவாகும்.
காஸாவில் நடைபெறும் போர் இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது.
நண்பர்கள் பகையாளிகள் ஆனது எப்படி?
உண்மையில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள், 1979 இல் அயத்துல்லாக்களின் (ஈரானில் உயர் பதவியில் உள்ள ட்வெல்வர் ஷியா மதகுருக்களுக்கான மரியாதைக்குரிய பெயர்) ‘இஸ்லாமியப் புரட்சி’ யின் மூலம், டெஹ்ரானில் அதிகாரத்தைக் கைப்பற்றும் வரை மிகவும் சுமூகமாக இருந்தது.
உண்மையில், 1948 இல் இஸ்ரேல் தேசத்தை உருவாக்க வழிவகுத்த பாலத்தீனப் பிரிவினைக்கான திட்டத்தை ஈரான் எதிர்த்தாலும், எகிப்துக்குப் பிறகு அதை அங்கீகரித்த இரண்டாவது இஸ்லாமிய நாடு ஈரான்.
அந்த நேரத்தில், ஈரான் பஹ்லவி வம்சத்தின் ஷா-க்களால் ஆளப்பட்ட ஒரு முடியாட்சி மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளிகளில் ஒன்றாகும். இந்த காரணத்திற்காக, இஸ்ரேலின் நிறுவனர் மற்றும் அதன் முதல் அரசாங்கத் தலைவரான டேவிட் பென்-குரியன், அதன் அரபு அண்டை நாடுகளால் புதிய யூத அரசை நிராகரிப்பதை எதிர்ப்பதற்கான ஒரு வழியாக ஈரானிய நட்பை நாடினார்.
ஆனால் 1979 இல், ருஹோல்லா கொமேனியின் புரட்சி, ஷா ஆட்சியை தூக்கியெறிந்து, ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாவலனாக தன்னைக் காட்டிக் கொண்ட ஒரு இஸ்லாமிய குடியரசை ஈரான் உருவாக்கியது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேலின் “ஏகாதிபத்தியத்தை” நிராகரிப்பதில் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக ஈரான் இருந்தது.
படக்குறிப்பு, கொமேனி மற்றும் இஸ்லாமியப் புரட்சியின் மற்ற தலைவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான பாலத்தீன காரணத்திற்கு அனுதாபம் கொண்டிருந்தனர்.
அயத்துல்லாக்களின் புதிய ஆட்சி இஸ்ரேலுடனான உறவைத் துண்டித்து, அதன் குடிமக்களின் பாஸ்போர்ட் அங்கீகாரத்தை நிறுத்தியது.
மேலும், டெஹ்ரானில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை பாலத்தீன விடுதலை அமைப்பிடம் (PLO) ஒப்படைத்தது. இந்த அமைப்பு, அப்போது இஸ்ரேலிய அரசுக்கு எதிராக பாலத்தீன நாட்டை உருவாக்குவதற்கான குரலை எழுப்பியது.
சர்வதேச நெருக்கடி குழு எனும் பகுப்பாய்வு மையத்தின் ஈரான் திட்ட இயக்குனர் அலி வாஸ் பிபிசி முண்டோவிடம் கூறுகையில், “இஸ்ரேலின் மீதான விரோதம் புதிய ஈரானிய ஆட்சியின் தூணாக இருந்தது.
ஏனெனில் அதன் தலைவர்கள் பலர் பாலத்தீனர்களுடன் கொரில்லா போர் நடவடிக்கைகளில் பயிற்சியளித்து அதில் பங்கேற்றுள்ளனர். லெபனான் போன்ற இடங்களில் அவர்கள் மீது மிகுந்த அனுதாபம் கொண்டிருந்தனர்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “புதிய ஈரான் தன்னை ஒரு இஸ்லாமிய சக்தியாக முன்னிறுத்த விரும்பியது. அரபு முஸ்லிம் நாடுகள் கைவிட்ட பாலத்தீன காரணத்தை இஸ்ரேலுக்கு எதிராக எழுப்பியது” என்றார்.
எனவே, பாலத்தீன காரணத்தைத் தனது சொந்த உரிமையாக கொமேனி கோரத் தொடங்கினார். அரசின் அதிகாரபூர்வ ஆதரவுடன் பெரிய பாலத்தீன சார்பு ஆர்ப்பாட்டங்கள் டெஹ்ரானில் வழக்கமானவையாக மாறின.
“இஸ்ரேலில், 1990-களில் ஈரானுக்கு எதிரான விரோதம் தொடங்கவில்லை. ஏனெனில், சதாம் ஹுசைனின் ஈராக், முன்னர் பெரியளவிலான பிராந்திய அச்சுறுத்தலாக உணரப்பட்டது” என்று ஈரான் திட்ட இயக்குனர் அலி வாஸ் விளக்குகிறார்.
காலப்போக்கில், இஸ்ரேல் தனது இருப்புக்கான முக்கிய ஆபத்துகளில் ஒன்றாக ஈரானைப் பார்க்கத் தொடங்கியது. இரு நாடுகளுக்கும் இடையிலான பகை வார்த்தைகளிலிருந்து தாக்குதல் வரை சென்றிருக்கிறது.
படக்குறிப்பு, ஹ்ரானில் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வழக்கமாகிவிட்டன.
இஸ்ரேல் – இரான் இடையே “நிழல் போர்”
டெஹ்ரானுடன் இணைந்த அமைப்புகளின் வலையமைப்புப் பெருகி, அதன் நலன்களுக்கு சாதகமான ஆயுத நடவடிக்கைகளை மேற்கொண்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாதிகளாக வகைப்படுத்தப்பட்ட லெபனான் ஹெஸ்புல்லா மிக முக்கியமானதாகும். இன்று, ஈரானிய “எதிர்ப்பின் அச்சு”, லெபனான், சிரியா, ஈராக் மற்றும் ஏமன் வழியாக நீண்டுள்ளது.
ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் தாக்குதல்கள் மற்றும் பிற விரோத நடவடிக்கைகளை இஸ்ரேல் பரிமாறிக்கொண்டது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சண்டை ஒரு “நிழல் போர்” என்று விவரிக்கப்படுகிறது. ஏனெனில், இரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்கிக்கொண்ட போது, பல சந்தர்ப்பங்களில், அரசாங்கங்கள் அதில் தங்கள் பங்கேற்பை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை.
1992 இல், ஈரானுடன் தொடர்புடைய இஸ்லாமிய ஜிஹாத் குழு, பியூனஸ் அயர்ஸில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் குண்டு வைத்து வெடிக்கச் செய்தது. இத்தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர். சிறிது காலத்திற்கு முன்பு, ஹெஸ்புல்லா தலைவர் அப்பாஸ் அல்-முசாவி படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலின் உளவுத்துறை இருப்பதாக பரவலாகக் கூறப்பட்டது.
இஸ்ரேலைப் பொறுத்தவரை, ஈரானிய அணுசக்தி திட்டத்தை துண்டித்து, அயத்துல்லாக்கள் அணு ஆயுதங்களை வைத்திருப்பதைத் தடுப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
படக்குறிப்பு, இரானிய அணுசக்தி திட்டத்தை துண்டிப்பது இஸ்ரேலின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
தனது திட்டம் பொதுநல நோக்கங்களை மட்டுமே தாங்கள் கொண்டிருப்பதாக ஈரான் கூறுவதை இஸ்ரேல் நம்பவில்லை. 2000களின் முதல் தசாப்தத்தில் இரானிய அணுசக்தி நிலையங்களுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய ஸ்டக்ஸ்நெட் கணினி வைரஸை அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் உருவாக்கியது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
டெஹ்ரான் தனது அணுசக்தி திட்டத்திற்கு பொறுப்பான சில முக்கிய விஞ்ஞானிகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு இஸ்ரேலிய உளவுத்துறைதான் பொறுப்பு என்று கண்டித்துள்ளது.
2020 இல் அதன் மிகவும் பொறுப்பான நபராக கருதப்படும் மொஹ்சென் ஃபக்ரிசாதேவின் படுகொலை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். ஈரானிய விஞ்ஞானிகளின் மரணத்தில் இஸ்ரேலிய அரசாங்கம் தனது தலையீட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
மேற்கத்திய நட்பு நாடுகளுடன் சேர்ந்து, கடந்த காலங்களில் தனது பிரதேசத்தில் ஆளில்லா விமானம் மற்றும் ராக்கெட் தாக்குதல்களுக்குப் பின்னால் இஸ்ரேல் இருப்பதாகவும், அந்நாடு பல இணையத் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஈரான் குற்றம் சாட்டியது.
2011 முதல் சிரியாவில் கட்டவிழ்த்துவிடப்பட்ட உள்நாட்டுப் போர் மோதலுக்கான மற்றொரு காரணமாகும்.
அமெரிக்க உளவுத்துறை இணையதளமான ஸ்ட்ராட்ஃபோரின் கூற்றுப்படி, வெவ்வேறு காலங்களில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டும் சிரியாவில் பெரியளவிலான தாக்குதலைத் தொடங்குவதைத் தடுக்கும் நோக்கில் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
“நிழல் போர்” 2021 இல் கடல் பகுதியை அடைந்தது. அந்த ஆண்டு, ஓமன் வளைகுடாவில் இஸ்ரேலிய கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் மீது இஸ்ரேல் குற்றம் சாட்டியது. ஈரான் தனது பங்குக்கு, செங்கடலில் இஸ்ரேல் தனது கப்பல்களைத் தாக்குவதாக குற்றம் சாட்டியது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்
அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலுக்கு எதிரான பாலத்தீன ஆயுதக்குழுவான ஹமாஸின் தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய பெரும் இராணுவத் தாக்குதலுக்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் மற்றும் அரசாங்கங்கள் இந்த மோதல் பிராந்தியத்தில் எதிர்வினையைத் தூண்டக்கூடும் என்று கவலை தெரிவித்தன.
ஈரானியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையே வெளிப்படையான மற்றும் நேரடியான மோதலுக்கு வழிவகுக்கும் என தெரிவித்தனர்.
சர்வதேச நெருக்கடி குழு எனும் பகுப்பாய்வு மையத்தின் ஈரான் திட்ட இயக்குனர் அலி வாஸின் கூற்றுப்படி, “இப்போது பெரிய அளவிலான மோதலை யாரும் விரும்பவில்லை என்பதுதான் நகைப்புக்குரிய விஷயம். காஸாவில் ஹமாஸுக்கு எதிராக அதன் பேரழிவுகரமான போரில் இஸ்ரேல் கடந்த ஆறு மாதங்களாக ஈடுபட்டுள்ளது.
இது சர்வதேச அரங்கில் அதன் நற்பெயரை பெரிதும் எதிர்மறையாக பாதித்துள்ளது. இஸ்ரேல் முன்னெப்போதையும் விட தனிமைப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
“ஹமாஸைப் போலல்லாமல், ஈரான் ஓர் அரசு. எனவே, மிகவும் சக்தி வாய்ந்தது” என்று ஆய்வாளர் எச்சரித்தார்.
ஆனால், அதேநேரத்தில், ” அது பல பொருளாதார சிக்கல்களைக் கொண்டுள்ளது. பல மாதங்களாக மதக் கட்டுப்பாடுகளால் சோர்வடைந்த பெண்களால் பல சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களால், அதன் அரசாங்கம் சட்டப்பூர்வ நெருக்கடியை எதிர்கொள்கிறது” என்றார்.
-BBC TAMIL NEWS-