இந்தியாவில் திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்கள் நிழல் இல்லாத அதாவது, நிழலைப் பார்க்க முடியாத நாட்களை காணமுடியும் என கூறப்படுகின்றது.
தினமும் சூரியன் நமக்கு மேல் உச்சியில் செல்வதுபோல தெரிந்தாலும், ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே மிகச் சரியாக உச்சியில் வரும்.
அப்போது ஒரு பொருளின் மேல் விழும் சூரிய வெளிச்சத்தின் விளைவாக, நிழல் அப்பொருளின் பரப்புக்கு உள்ளேயே விழுவதால் அதன் நிழலைப் பார்க்க முடியாது.
இந்த நிகழ்வு வெறும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நடைபெறும். இந்த நாட்களை நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்கின்றனர்.
இதற்கமைய இந்த ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் இன்று (17) திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, மணிகண்டம், திருவெறும்பூர் பகுதிகளிலும் நாளை (18) புள்ளம்பாடி, லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், முசிறி, தா.பேட்டை, தொட்டியம் பகுதிகளிலும், நாளை மறுநாள் (19) துறையூர் உப்பிலியபுரம் பகுதிகளிலும் நிழல் இல்லா நாள் அமைகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் தெரிவிக்கையில், இந்த எளிய வானியல் நிகழ்வை அவரவர் வீடுகளிலேயே செய்து பார்க்கலாம்.
உரிய நேரத்தில் சமதள பரப்பளவில் ஏதேனும் ஒரு உருளையான பொருளை செங்குத்தாக வைத்து அதன் நிழல் விழவில்லையா என்பதை பார்க்கலாம்.