மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடனக்கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும்பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் விரிவுரையாளரும் கல்லூரியின் முன்னாள் அதிபருமான கலாபூசணம் திருமதி இராஜேஸ்வரி தட்சணாமூர்த்தி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (20) நடைபெற்றது.
விபுலானந்தா இசை நடனக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் தனது திறமையினாலும் ஆற்றலினாலும் பெருமளவான கல்வியியலாளர்களை உருவாக்கிய பெருமையினை கௌரவிக்கும் வகையில் வாழும்போதே வாழ்த்துவோம் என்னும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
விபுலானந்தா இசை நடனக்கல்லூரியின் பழைய மாணவர்கள் இணைந்து நடாத்திய இந்த நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள விபுலானந்தர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.
விபுலானந்தா இசை நடனக்கல்லூரியின் பழைய மாணவியும் பட்டிருப்பு கல்வி வலய இசைத்துறை சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி டேசிராணி இராஜகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிசன் பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் நீலமாதவானந்தா ஜி மகராஜ் கலந்துகொண்டதுடன், முதன்மை விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஓய்வுநிலை பேராசிரியர் மா.செல்வராஜா கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக இந்துக்கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் உதவி பணிப்பாளர் எஸ்.தெய்வநாயகம்,கிழக்கு பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை தலைவர் பேராசிரியர் திருமதி சாந்தி கேசவன்,பேராசிரியர் சி.மௌனகுரு, விவேகாந்தா மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சுவாமி விபுலானந்தரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதை தொடர்;ந்து மணிமண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றது.
ஓய்வுபெற்ற முன்னாள் விரிவுரையாளரும் கல்லூரியின் முன்னாள் அதிபருமான கலாபூசணம் திருமதி இராஜேஸ்வரி தட்சணாமூர்த்தி அவர்களை கௌரவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்ததுடன் அவரது பழைய மாணவர்களினால் பாதபூஜை செய்யப்பட்டு அவரை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.