இலங்கையின் அரச இணையத்தளங்கள் பெரும்பாலானவை முக்கியமான பாதுகாப்பு சொக்கெட் லேயர் (Secure Sockets Layer) சான்றிதழை கொண்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதுவே இணையப் பாதுகாப்பின் இணைப்பை உறுதி செய்யும் அடிப்படைக் கூறாக உள்ளமையால் குறித்த சான்றிதழ் இல்லாமையானது, பயனர்களின் முக்கியத் தரவுகளை ஆபத்தில் ஆழ்த்தவுள்ளது.
நாட்டில் உள்ள 130 அதிகாரபூர்வ வலைத்தளங்களின் சுயாதீன பகுப்பாய்வில், குறைந்தது 35 வலைத்தளங்கள் சொக்கெட் லேயர் (SSL) சான்றிதழ்களை கொண்டிருக்கவில்லை.
எனவே, தரவு குறியாக்கம் செய்யப்படாத இணையத்தளங்கள் எளிதாகத் திருடப்படலாம் அல்லது கையாளப்படலாம்.
இந்தநிலையில், கடந்த ஆண்டு மே மாதம் எடுக்கப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானத்தின் கீழ், முக்கிய இணைய பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பான இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (Sri Lanka Computer Emergency Readiness Team) வகுத்த தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு கொள்கைகளை பல அரச இணையத்தளங்கள் மீறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாத ஆரம்பத்தில் கல்வி அமைச்சின் இணையத்தளம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.