2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டில் நிலவிய மிகவும் கடினமான பொருளாதார நிலைமைக்கு மத்தியில் பாதிப்புக்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் ஊட்டச்சத்து மட்டத்தைப் பேணுவதற்கான தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவின் பிரதான நிகழ்வு நேற்று (21) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் முஹம்மது ஹனீபா தலைமையில் கோரக்கல் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பாதிப்புக்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கி அந்த மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் முழு நாட்டையும் உள்ளடக்கும் விதமாக குறைந்த வருமானம் பெறும் சுமார் 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ கிராம் நாட்டு அரிசியை இரண்டு (02) மாத காலத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ் வேலைத்திட்டம் தேசிய ரீதியாக நேற்று (21) ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்கீழ், சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் சுமார் 12000ற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக்க அபேவிக்ரம விசேட அதிதிகளாக சம்மாந்துறை மஜ்லிஸ் ஹூரா தலைவர் எம்.ஐ.எம். அமீர் (நளிமி), அம்பாறை மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.பீ.அனீஸ், உதவி பிரதேச செயலாளர் யூ.எல்.அஸ்லம் (எல்.எல்.B),அம்பாறை மாவட்ட கணக்காளர் ஐ.எம். பாரிஸ், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம்.அஸ்லம், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம். ஹுசைன், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.எல்.ஐ. கபீர், கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எல்.எம் தாஸீம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் இணைப்பாளர் ஏ.ஏ.ஏ ஆகீப்,பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷரபின் இணைப்பாளரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.சீ.எம் சஹீல், பாடசாலை அதிபர், கிராமசேவகர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,அரிசி ஆலை உரிமையாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.