முல்லேரியாவில் கைது செய்யப்பட்ட இரண்டு கடற்படை லெப்டினன்ட் கமாண்டர்கள் உள்ளிட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய போதைப்பொருள் கடத்தலில் பாதுகாப்புப் படையின் ஏனைய உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த கும்பலை கைது செய்வதற்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் முல்லேரிய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முல்லேரியாவில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட கடற்படை லெப்டினன்ட் கமாண்டர்கள் இருவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 19ஆம் திகதி இரவு முல்லேரிய பொலிஸார் 500 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் சென்ற போது இரண்டு லெப்டினன்ட் கமாண்டர்கள் உட்பட நால்வரை கைது செய்தனர். அவர்கள் சென்ற காரும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டது.
கடற்படை அடையாள அட்டையை பயன்படுத்தி இவர்கள் நீண்டகாலமாக இவ்வாறு போதைப் பொருட்களை மொத்தமாக கொண்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய இரண்டு கடற்படை அதிகாரிகள் வெள்ளவத்தை கடலோர காவல்படை பிரிவில் இணைக்கப்பட்டுள்ளனர். ரிமாண்ட் உத்தரவின் பேரில் இருவரும் முல்லேரியா பொலிஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.