இலங்கையில் நடந்த இறுதிப்போரின் போரின் போது பணியாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி கோர்டன் வெயிஸ் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து விசேட உரை வழங்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இறுதிக் கட்ட ஆயுதப் போரின் போது இலங்கையில் ஐக்கிய நாடுகளின் பேச்சாளராக பணியாற்றினார்.
இந்தநிலையில், எதிர்வரும் (18.05.2023) வியாழக்கிழமை நியூயோர்க்கில் அவர் தமது நினைவேந்தல் உரையை நிகழ்த்துவார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
“இலங்கை தொடர்பான ஐ.நா.வின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில், ஆறு மாதங்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.
International Truth and Justice Project (ITJP) அமைப்பு பெப்ரவரி 2017 இல் ஐ.நாவிடம் ஒப்படைத்த, தமிழ்ப் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” அடைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ “கற்பழிப்பு முகாம்கள்” பற்றிய விபரங்கள்.
மேலும், ஏப்ரல் 2013 இல் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக அறிக்கையின்படி, இலங்கையில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் போர் விதவைகள் உள்ளனர்.
ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் போனவர்கள், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.
2020 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு வெளியிட்ட தரவின்படி, உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கையில் இடம்பெற்றது.
ஐ.நா அறிக்கையின்படி, நடந்த கொலைகள் மற்றும் பிற துஷ்பிரயோகங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும்.
இலங்கைப் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழம் என்ற ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாட்டை அமைப்பதற்காக தமிழர்கள் பெருமளவில் வாக்களித்தனர்.
இந்த நாடாளுமன்றத் தேர்தல் இலங்கை அரசால் நடத்தப்பட்டது.” குறித்த விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி கோர்டன் வெயிஸ் விரிவான உரை நிகழ்த்தவுள்ளார்.