மாகாண சபை தேர்தல், 13ஆவது திருத்தச் சட்டம், இடைக்கால நிர்வாக வரைவு, புதிய அரசியல் யாப்பு உட்படபல விடயங்கள் குறித்து ஜனாதிபதி – தமிழ் எம். பிக்கள் நேற்றுக் கூடிப் பேசினர். எனினும், இந்த விடயங்கள் தொடர்பில் எந்த ஒரு தீர்க்கமான முடிவும் எடுக்கப்படாமலே பேச்சு நிறைவடைந்தது.
அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சு நேற்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது. சந்திப்பு ஆரம்பமானதுமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “மாகாண சபைகளுக்கு இடைக்கால ஆலோசனை குழுவை நியமிப்பது குறித்து நீங்கள் அனுப்பிய அறிக்கை கிடைத்தது அது பற்றி பேசுவோமா”, என்று கேட்டார். அந்த அறிக்கையை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த விக்னேஸ்வரன் எம். பி. தன்னிடம் இருந்த அந்த அறிக்கையை அங்கேயே வாசித்தார். இடையிலேயே அதனை மறித்த சுமந்திரன் எம்.பி. இது காலத்தை இழுக்கும் செயல், மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து ஏற்கனவே தனிநபர் சட்டத் திருத்தத்தை முன்வைத்துள்ளேன். அதனை நிறைவேற்றி மாகாணசபை தேர்தலை வைக்க வேண்டும் என்று கூறினார்.
இந்தக் கருத்தை ஆமோதித்த சித்தார்த்தன் எம். பி., இந்த இடைக்கால ஆலோசனை குழுவின் அறிக்கையில் பிள்ளையான் எம். பி. மட்டுமே ஒப்ப மிட்டுள்ளார்- என்று கூறினார். இதையடுத்து, அதிகாரப் பகிர்வு சம்பந்தமான புதிய அரசமைப்பு தொடர்பாக பேசப்பட்டது. சுமந்திரன் எம். பி., “ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அரசமைப்பு வரைவு உள்ளது. அதிலிருந்து பணிகளை தொடரலாம்” என்று தெரிவித்தார். சித்தார்த்தன் எம். பி., “அரசமைப்பு திருத்தம் நீண்டகாலம் இழுபடும். தீர்வும் கிடைக்காது” என்று கூறினார
“அப்படியானால் என்ன செய்யலாம் ”, என்று ஜனாதிபதி கேட்டார். மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. இதனை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர். அத்துடன், மத்திய அரசாங்கம் காலத்துக்கு காலம் சட்டத் திருத்தங்கள் மூலம் பெற்றுக்கொண்ட மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டு முழுமையான அதிகாரங்கள் கொண்டதாக 13ஆம் திருத்தச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தினர்.
இது சம்பந்தமாக, அமைச்சர்கள், மற்றும் ஆட்சித் தரப்பினருடன் பேசியே முடிவு செய்ய வேண்டும். அவற்றை செய்வோம். என்று கூறிய ஜனாதிபதி மீண்டும் ஜூன் மாதத்தில் இது சம்பந்தமாக பேசுவோம் என்று கூறினார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தப் பேச்சில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் த. சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்த கருணாகரம், தமிழரசு கட்சியின் சார்பில் இரா. சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன், சி. சிறீதரன், த. கலையரசன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தமிழ் மக்கள் கூட்டணியின் க. வி. விக்னேஸ்வரன், சுதந்திரக் கட்சியின் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் பங்கேற்றனர். ஜனாதிபதியுடன், இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன், நீதி அமைச்சர்கள் விஜயதாஸ ராஜபக்ஷ, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் பங்கேற்றனர்.