ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க, சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ வெளிநாடு சென்றிருப்பதால், அவர் நாடு திரும்பிய பின்னர் புதிய ஆளுநர் நியமனம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு மாகாணங்களுக்கான ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்திருந்த நிலையில், மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.
அதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எம். சார்ள்ஸ் அரச நிர்வாக சேவையில் தேர்ச்சி பெற்ற அதிகாரியாவார். அவர் அரச அதிபர், முன்னாள் ஆளுநர், சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் என முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராவார். அவர் ஊவா மாகாண சபையில் அமைச்சராகவும், பதில் முதலமைச்சராகவும் செயற்பட்ட அனுபவம் கொண்டவர்.
வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன முன்னாள் அமைச்சராவார். அவர் மாகாண சபையிலும் பதவிகளை வகித்துள்ளார். தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் சகோதரரே லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன ஆவார்.