மட்டக்களப்பு முகத்துவாரம் வைத்தியசாலையில் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாக முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. தற்போது ஐந்து ஊழியர்கள் இங்கு பணிபுரிவதாகவும் சேவையைப்பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து வீடு திரும்புவதாகவும் அறிய முடிகிறது.
இங்கு சிட்டைவழங்குதல், மருந்து வழங்குதல், நோயாளர் தங்குமிட கவனிப்பு என பல பணிகளை ஐந்து ஊழியர்களும் மாறி மாறி மேற்கொள்வதாக அறிய முடிகிறது. அங்கிருந்த பொது மக்களிடம் இது குறித்து Battinaatham ஊடகம் கேள்வி எழுப்பிய வேளையில் சுமார் 2.00 மணிக்கு சிட்டையை பெற்றுக்கொள்ளும் நோயாளி ஒருவர் 2.30 இற்கு வைத்தியரிடம் பரிசோதனை செய்து 4.00 மணியளவில் மருந்துகளை பெறுகிறார் என கூறினர். ஏன் சில சமயங்களில் வைத்திய அதிகாரி கூட பொது மக்களுக்கு சிட்டை எழுதியும் கொடுப்பார் எனவும் கூறினர்.
இது தொடர்பில் பொறுப்பான வைத்திய அதிகாரியிடம் வினவியபோது, குறித்த வைத்திய சாலைக்கான ஊழிய ஒதுக்கீடு ஐந்தாகவே உள்ளது. நாங்களும் பல சிரமங்களுக்கு மத்தியிலே சேவையாற்றுகின்றோம். இது குறித்து பிராந்திய சுகாதார வைத்திய பணிமனைக்கு நாம் அறிவித்த வேளையில் இன்னும் ஒருவாரத்தில் இப்பிரச்சனைக்கான தீர்வினை வழங்குவதாக கூறியுள்ளனர்.