இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் நுவரெலியா முக்கிய சுற்றுலா நகரமாக விளங்குகிறது. இதில் ஏப்ரல் மாதத்தில் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர் . சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரில் சுகாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக நகரில் போதிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாத நிலையில் குப்பைகளை கண்ட இடங்களில் வீசிச் செல்வதால் நகரம் அசுத்தப்பட்டு சுகாதார சீர்கேடான நிலையில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இவ்விடயத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் நுவரெலியா மாநகரசபை சற்று பின்தங்கியுள்ளது.
நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் சென்று உணவு சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். பெரும்பாலானவர்கள் வாகனங்களில் வரும் நிலையில் வரும் போதே உணவை சமைத்து எடுத்து வருகின்றனர் .
இவ்வாறு வருபவர்கள் நுவரெலியா பிரதான நகர், ஹக்கல பூங்கா , விக்டோரியா பூங்கா, கிறகறி வாவி கரை போன்ற பகுதிகளில் வீதியோரங்களிலும் மற்றும் புல்வெளிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் தங்களது வாகனங்களை நிறுத்தி சாப்பிடுகின்றனர்.
இவர்கள், சமைத்தோ அல்லது எடுத்து வந்த உணவை சாப்பிட்டு முடித்த பின், எஞ்சிய உணவு கழிவுகள், மாமிசம் , எலும்புத்துண்டுகள் , பிளாஸ்டிக் குடிநீர் போத்தல் , எளிதில் மக்கிப்போகாத பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட சில கழிவுப்பொருட்களையும் அதே இடங்களில் வீசிச் செல்கின்றனர்.
இவ்வாறு வீசிச் செல்லும் கழிவுகளை உணவாக தேடி கால்நடைகள் அப்பகுதியை முற்றுகையிடுகின்றது இதில் நாய்கள் , பறவைகள் அவற்றை நாலாபுறமும் இழுத்துச் சென்று போடுவதால் நடைபாதை மற்றும் பிரதான நகரம் அலங்கோலமாகக் காட்சி தருகின்றது.
வாகனச் சாரதிகளும் பாதிக்கப்படுகின்றனர் இவை மூலம் ஈக்களின் பெருக்கம் அதிகரித்து ஈக்களால் பரப்பப்படும் வியாதிகளும் தொற்றும் ஆபத்துள்ளதாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் தேவைக்கேற்ப குப்பைத் தொட்டிகள் வைப்பது அவசியம் எனவும் குறித்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் இதனை கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுகின்றனர்.