மட்டக்களப்பில் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டதாக பொய்யாக கூறி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சிறுவன் ஏரிஎம் இயந்திரத்தில் பணத்தை தொலைத்துவிட்டு வான் ஒன்றில் கடத்திவரப்பட்டு அதில் இருந்து தப்பை ஓடி வந்ததாக பொய் கூறிய சிறுவனை புதன்கிழமை (17) பிற்பகல் கைது செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காவத்தையில் தாய் ஒருவர் 17 வயதுடைய தனது மகனை ஏரிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுத்துவருமாறு அனுப்பிய நிலையில் பணத்தை தொலைத்துவிட்டு சிறுவன் வீடு செல்ல பயந்து அங்கிருந்து மட்டக்களப்புக்கு தப்பி ஓடிவந்து தன்னை காவத்தையில் இருந்து வானில் கடத்தியதாக நாடகமாடியுள்ளார்.
சம்பவதினமான புதன் பிற்பகல் 2 மணியளவில், 17 வயதுடைய சிறுவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து தான் காவத்தையைச் சேர்ந்தவர் எனவும் திங்கட்கிழமை வங்கியில் ஏரிஎம் இயந்திரத்தில் தாயார் 3 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துவருமாறு அனுப்பிய நிலையில் பணத்தை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்து சென்ற போது, வான் ஒன்றில் வந்தவர்கள் தன்னை கடத்திச் சென்று, முகத்தை துணியால் மூடி கட்டியதுடன் கைகளையும் கட்டி வைத்திருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வானில் கடத்தி சென்று, வீடு ஒன்றில் கட்டிவைத்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தபோது, கடத்தல் காரர்கள் தன்னைத் தாக்கி, கறுப்பு வானில் ஏற்றி வந்த நிலையில் இந்தப் பகுதி வீதியில் வானில் இருந்து தப்பி ஓடி வந்துள்ளதாகவும் வானில் கத்தி, வாள் போன்ற ஆயுதங்கள் மற்றும் பெண்களின் ஆடைகள் இருப்பதாகவும் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
காவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு சிறுவனின் புகைப்படத்தை அனுப்பி அவன் தொடர்பாக விசாரித்தபோது குறித்த சிறுவன் கடத்தப்பட்டதாக எந்தவித முறைப்பாடும் இல்லை எனவும் இவன் இவ்வாறு 3 தடவை வீட்டில் இருந்து பணத்தை எடுத்து தப்பி ஓடியவர் என தெரியவந்ததையடுத்து சிறுவனை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறுவனின் உறவினர்களை தொடர்பு கொண்டு வரவழைக்கப்பட்டதை அடுத்து வியாழக்கிழமை (18) காவல் நிலையத்திற்கு வந்த உறவினர்களிடம் சிறுவனை எச்சரித்து ஒப்படைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.