களுத்துறை தெற்கு ஊழல் ஒழிப்பு பிரிவு நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுவிப்பதற்காக இவ்வாறு இலஞ்சம் கொடுக்க முயற்சித்துள்ளார்.
களுத்துறை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-2.png)
இதேவேளை சந்தேகநபர் 03 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி, தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவிற்கு அறிவித்ததை அடுத்து சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு இலஞ்ச ஒழிப்புப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டி.ஸ்ரீ ரங்கா, ஹெரோயின் போதைப் பொருளுடன் அவரது கணவரை கைது செய்து களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
சந்தேகநபர் சட்டையை எடுத்து வருமாறு மனைவிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும், சுமார் 20 நிமிடங்களின் பின்னர் மனைவி பொலிஸ் நிலையம் வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-4.png)
இதன்போது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கு 3 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்கி ஹெரோயின் வழக்கில் இருந்து சந்தேகநபரை விடுவிக்குமாறு குறித்த பெண் கோரியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.