பிரித்தானியாவிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை ருவாண்டாவுக்கு நாடுகடத்திவிட்டதாக பிரித்தானிய அரசு பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறது.
நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்தோர் பலர் தலைமறைவாகிவருகின்றனர். சோமாலியாவைச் சேர்ந்த யூசுஃப் என்பவர், வாரத்துக்கு ஒரு முறை உள்துறை அலுவலகம் ஒன்றில் கையெழுத்திடவேண்டும். வழக்கமாக அங்கு ஒரு நீண்ட வரிசையில் புலம்பெயர்ந்தோர் காத்திருப்பார்கள்.
ஆனால், நேற்று அந்த அலுவலகத்துக்கு யூசுஃப் வந்தபோது அங்கு யாரும் இல்லை. அத்துடன், தன்னைப்போலவே கையெழுத்துப்போட வந்த ஒரு புலம்பெயர்ந்தோரை அதிகாரிகள் பிடித்துச் சென்றதை அவர் கண்டார் .
ஒருவேளை அவர் ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படுபவர்களில் ஒருவராக இருக்கலாம் என தான் எண்ணுவதாகத் தெரிவிக்கிறார் யூசுஃப்.
ஆக, நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சத்தில், பிரித்தானியாவிலிருக்கும் புலம்பெயர்ந்தோர் தலைமறைவாகிவருவதாக கருதப்படுகிறது. ஏற்கனவே, பிரித்தானியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர் பலர் அயர்லாந்துக் குடியரசுக்குள் நுழைந்துவருவதாக அந்நாட்டு அமைச்சர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், நீங்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படலாம் என 5,700 புலம்பெயர்ந்தோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 3,557க்கும் அதிகமானோர் தலைமறைவாகிவிட்டதாக உள்துறை அலுவலக வட்டாரமே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.