லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171வது படத்தின் பெயர் ‘கூலி’ என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்தப் படத்திற்கு இளைராஜாவால் ஒரு புதிய சிக்கல் வந்துள்ளது.
கூலி படத்திற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூலி படத்தின் பெயர் அறிவிப்பு டீஸர் வெளியானது. இந்த டீஸரில் ரஜினிகாந்த் லுக் மற்றும் வசனங்கள் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது. குறிப்பாக “முடிச்சர்லாமா” என்ற வசனம் மீம்ஸ் மெட்டிரியலாக மாறியுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த டீஸரில் தங்கமகன் படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் ‘வா வா பக்கம் வா’ பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தது.
டைட்டில் டீஸர் வெளியாகி சுமார் 8 நாட்களான பின்னர் தற்போது ஒரு புதிய சிக்கல் வந்துள்ளது. அதாவது, கூலி பட டீஸரில் பயன்படுத்தப்பட்ட ‘வா வா பக்கம் வா’ பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பிலிருந்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ஸர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே சமீபக்காலமாக இளையராஜா தனது பாடலை அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என்று கூறி வழக்குத் தொடர்ந்தார். INRECO மற்றும் AGI உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் இளையராஜா இசையமைத்த 4, 500 பாடல்களை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தயாரிப்பாளர்களிடம் உரிமையை பெற்று இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என உத்தரவிட்டது. இந்தப் பிரச்சனை தொடர்க்கதையாக இருந்து வரும் நிலையில், கூலி படத்தில் இளையராஜாவின் பாடல் அனுமதியின்றி பயன்படுத்தியது, 1957-ன் கீழ் குற்றம் என்று நோட்டிஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்றும், இதற்கு முன்னர் விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘விக்ரம் விக்ரம்’ பாடலுக்கும் தங்களிடம் அனுமதிபெறவில்லை என்றும் கூறியுள்ளார். அதேபோல் லோகேஷ் இயக்கிய ஃபைட் கிளப் படத்தில் இடம்பெற்ற ‘என் ஜோடி மஞ்ச குருவி’ பாடலும் அனுமதியின்றி மறு உருவாக்கம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.