பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றின் வேதனமாக 1700 ரூபாயை அதிபர் ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி மூலம் அறிவித்திருந்த நிலையில் அதற்கு எதிராக உயர்நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக பெருந்தோட்டத்துறை நிறுவனங்களின் சம்மேளனம் எச்சரித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கொட்டகலையில் நடத்தப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வில் பங்கேற்ற அதிபர் ரணில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை நாளொன்றுக்கு 1000 ரூபாயை வேதனமாக பெறும் பெருந்தோட்ட தொழிலாளி ஒருவர் 1700 ரூபாயை பெறுவார் என்று ரணில் அறிவித்திருந்தார்.
எனினும் ஆரம்பத்தில் இருந்தே இந்த ஏற்பாட்டுக்கு பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் உடன்பாட்டை தெரிவிக்கவில்லை.
அத்தோடு முன்னதாக இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களிலும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் குறித்த சம்மேளனம் உயர்நீதிமன்றுக்கு செல்லுமானால் மீண்டும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனப்பிரச்சினை தொடரும் பிரச்சினையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.