ராகுல் காந்தி பிரிட்டிஷ் நாட்டவர் என்றும் சிறை தண்டனை பெற்றவர் என்றும் காரணம் காட்டி ரேபரேலியில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த வெள்ளிக்கிழமை உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலம் காரணமாக போட்டியிடவில்லை.
இந்நிலையில், அனிருத் பிரதாப் சிங் என்பவர் சார்பில் வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவர், ராகுல் காந்தியின் வேட்பு மனுவை நிராகரிக்க ரேபரேலி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கறிஞர் அசோக் பாண்டே கூறுகையில், “அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடைதான் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிடுகிறார்கள்.
அதே நேரம் கடந்த 2006 -ம் ஆண்டு ராகுல் காந்தி தனது குடியுரிமை பற்றி பேசும்போது தான் ஒரு பிரிட்டிஷ் நாட்டவர் என்று குறிப்பிட்டார். இதனால், பிரிட்டிஷ் குடிமகனாக இருப்பவர் சட்டப்படி தேர்தலில் போட்டியிட முடியாது.
இதன் காரணமாக ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளேன்” என்றார்.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் பால் சிங் தனது அறிக்கையில், “இதற்கு முன்பாக ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த முறையும் ராகுல் காந்தியின் வேட்பு மனுக்கள் தகுதி வாய்ந்தவை தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.