இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்துச் செல்வதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.
நேற்று (07) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தினால் அதிகரித்துச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது.
அதன்படி 2015 ஆம் ஆண்டு 30,657 ஆக காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை, 2023 ஆம் ஆண்டில் 72,546 ஆக உயர்வடைந்துள்ளது எனவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இவ்விடயத்தில் அதிக கவனமெடுத்து சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை நாடு முழுவதிலும் முன்னெடுக்கவுள்ளது என அமைச்சர் ரமேஷ் பத்திரன இதற்கு பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.