பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி நகை மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி பெண் ஒருவரை ஏமாற்றி கடத்திச் சென்று நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகக் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்திற்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதானை, தெமட்டகொடை மற்றும் கொழும்பு 8 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 38, 47 மற்றும் 70 வயதுடைய மூன்று நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி பல்வேறு நபர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து நகை மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டுள்ளதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 3 காதணிகள் மற்றும் 1 மோதிரம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.