சர்வதேச தொழிலாளர் தினம் இன்று (01) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம், இது மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்களிப்புகள் இந்த நாளில் நினைவு கூரப்படுகிறது.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிற்சங்கங்களும், சோசலிசக் குழுக்களும் தொழிலாள வர்க்க மக்களுக்கு ஆதரவான நாளாக மே 1-ஐ அறிவித்தது.
1886-ஆம் ஆண்டில் மே முதல் நாள் அமெரிக்காவின் பிற நகரங்களில் நடைபெற்றது போலவே சிகாகோ நகரிலும் எட்டு மணி நேர வேலை நாள் கோரி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடங்கியது.

இதனை அடுத்து பொலிஸார் போராடிய தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவியதை தொடர்ந்து வன்முறை வெடித்தது.
சில தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்து சிகாகோவில் உள்ள ஹேமார்க்கெட்
சதுக்கத்தில் அமைதி பேரணி நடைபெற்றது. இதனை கலைக்க வந்த பொலிஸார் மீது குண்டு
ஒன்று வீசப்பட தொழிலாளர் மீதான அடக்குமுறை தீவிரமானது. இறுதியில், வன்முறை
முடிவதற்குள் 7 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர்.
நான்கு முதல் எட்டு பொதுமக்கள் இறந்ததாகவும், 30 முதல் 40 பேர் காயமடைந்ததாகவும்
கூறப்படுகிறது. தொழிலாளர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் இந்த சம்பவத்தை
நினைவுகூரும் வகையிலேயே ‘உழைப்பாளர் நாள்’ மே 1-ம் திகதி அனுசரிக்கப்படுகிறது.