முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை என்றால் மட்டக்களப்பில் புறக்கணிப்போம் வெசாக் பண்டிகையினை என மட்டக்களப்பு முன்னாள் மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் உப்பிலா கஞ்சி நினைவு தினம் அனுட்டிப்பு என்பது தனி ஒரு நபருக்கு நடந்த அநீதியோ, உரிமை மீறலோ அல்ல அது இந்த நூற்றாண்டின் தமிழ் இனத்திற்கே நடந்த அநீதி ஆகும்.
கோயிலில் கஞ்சி காய்ச்சுதல் மற்றும் பொது இடங்களில் கஞ்சி கொடுத்தல் கூடாது என தடை உத்தரவுகளை வழங்க பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கின்றது இந்த அரசாங்கம்.
கஞ்சி எமது கலாசாரத்துடன் இணைந்த ஒரு பாரம்பரிய உணவு.அனைத்தையும் இழந்த எம் சனத்திற்கு அதுவே அன்று பசியாற்றியது.
மட்டக்களப்பில் வெசாக் கூடுகள் கட்டப்பட்டு வெகு விமர்சையாகக் கொண்டாட யார் காரணம்? தமிழர் நாம் தான் காரணம். அவர்களை போல் அவர்களது கலாசாரப் பாரம்பரியத்தை நாம் தடுக்கவோ எதிர்க்கவோ தேவையில்லை, மாறாக நாம் அதனை புறக்கணிப்போம்.
நாம் அங்கு சென்று பார்வையிடவோ, அவர்களது பானங்களை பருகவோ, சிற்றுண்டிகளை உண்ணவோ, பால் சோற்றினையோ உண்ணவோ தேவையில்லை. எம் இரத்தம் வடிய வடிய தமிழினம் அழிகையில் தெற்கில் பால் சோறு பொங்கினர். அது தேங்காய்ப் பால் இல்லை எம் இனத்தின் இரத்தம் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது என்று மேலும் தெரிவித்தார்.