தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை மக்களுக்கு உண்டு. அதைச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆகிய இருவரிடமும் தொடர்பு கொண்டு பேசிய போதே இதனை கூறியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு, சம்பூர் பகுதியில் பெண்கள் உட்பட சிலர் கைது செய்யப்பட்டிருந்தமை தொடர்பில் மிகவும் சிக்கலான நிலை எழுந்திருந்ததை பலரும் விவாதித்திருந்தனர்.
இது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனிடம் கடந்த செவ்வாய்க்கிழமை திருகோணமலை ஆயர் நோயல் இம்மானுவேல் ஆண்டகே, சம்பூர் கைது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு விடுத்த வேண்டுகோளையடுத்து ஜனாதிபதி ரணிலுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் நேரில் கலந்துரையாடியுள்ளார்.
மேலும் இந்த கைது தொடர்பில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிக்கல் நிலைகள் தொடர்பிலும் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தியிருந்ததையடுத்து அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் அவர்களுக்கு தொலைபேசி ஊடாக அழைத்த ஜனாதிபதி இது தொடர்பில் பொலிஸாருக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் துரித நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறிப்பாக மே18 வரையில் தமிழர் பகுதியில் இடம்பெறும் நிகழ்வுகளில் பொலிஸார் சுமூகமான ஒரு நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்றையதினம் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோகனேசன் கலந்துரையாடியதுடன் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தற்போது உள்ள நிலவரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனிடம் இன்று கேட்டறிந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.