அணு ஆயுத யுத்தத்திற்கான ஆபத்துக்களை மேற்குலக நாடுகள் குறைத்து மதிப்பிடுவதாக ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் பிரதமருமான திமித்ரி மெத்தவடேவ் எச்சரித்துள்ளார்.
உக்ரைனின் அதிபராக வெலெடிமீர் ஷெலென்ஸ்கி நீடிக்கும் வரை அமைதித் தீர்வு சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் மாற்ற முடியாத சட்டங்கள் உள்ளதாக கூறியுள்ள அவர், அணு ஆயுத போரைப் பொறுத்தவரை முதலில் யார் தாக்குதலை நடத்துவது என்ற விடயம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை மேற்குலக நாடுகள் முழுமையாக உணரவில்லை எனவும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என நம்புகின்றார்கள் எனவும் திமித்ரி மெத்வடேவ் கூறியுள்ளார்.
எனினும் இதற்கு சில நிபந்தனைகள் உள்ளதாகவும் அந்த நிபந்தனைகள் மீறப்படும் போது அணு குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் நிலைமை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
பேச்சுகள் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவருவது தவிர்க்க முடியாத ஒன்று என்ற போதிலும் தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் இருக்கும் போது ரஷ்யாவின் நிலைப்பாடு மாறாது எனவும் திமித்ரி மெத்வடேவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே மருத்துவ வசதி மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைனின் முதல் பெண் மணி ஒலேனா ஷெலென்ஸ்கா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மருத்துவ வசதி மற்றும் பொதுமக்களின் இலக்குகள் மீதான ஏவுகணை தாக்குதல்களில் உயிரிழப்புக்களும் காயமடைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ள கூறியுள்ள அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி, இந்த பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது இரங்கல்களை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
ரஷ்ய பயங்கரவாதிகள் மனிதாபிமானம் மற்றும் நேர்மையான அனைத்திற்கும் எதிரானவர்கள் என்பதை உறுதி செய்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் 23 பேர் காயமடைந்துள்ளதாக கூறியுள்ள டினிப்ரோ பிராந்திய ஆளுநர், காயமடைந்தவர்களில் 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதுடன், அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் மூன்று மற்றும் ஆறு வயதான இரண்டு சிறுவர்களும் அடங்கியுள்ளதாக ஆளுநர் செர்ஹி லிசாக் தெரிவித்துள்ளார். முன்னதாக ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி கடுமையான வான் வழித் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டதாகவும் 17 ஏவுகணைகளையும் 31 ஆளில்லா விமானங்களையும் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைய்ன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
டினிப்ரோ மற்றும் கெர்கீவ் பிராந்தியங்களை இலக்குவைத்து அதிகமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன், தலைநகரை குறிவைத்து அனுப்பட்ட ஆளில்லா விமானம் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கிரைய்மியா பிராந்தியத்தின் கிழக்கு பகுதியில் உக்ரைனின் இரண்டு ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக பிராந்திய ஆளுநர் கூறியுள்ளார்.
இந்த தாக்குதல்களால் உயிரிழப்புக்களோ பாரிய அளவான சேதங்களோ ஏற்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியம் மீது கடந்த 24 மணித்தியாலங்களில் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐந்து மாவட்டங்கள் மீது ஆளில்லா விமானங்கள், சிறு பீரங்கி மற்றும் பீரங்கிகளால் 132 க்கும் அதிகமாக தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பிராந்திய ஆளுநர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் எல்லை தாண்டிய தாக்குதலை முறியடித்ததாகவும் இது உக்ரைனின் நாச வேலை எனவும் கூறிய ரஷ்யா, இந்த தாக்குதலுக்கு மிகவும் கடுமையான பதிலடி வழங்குவோம் என சூளுரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.