சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவும், கட்சியின் பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்தவும் செயற்படுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
குறித்த உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான நேற்றுமுன்தினம் (20) பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 16 ஆம் திகதி சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும், பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்தவும் செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இதன்படி, அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், சட்டத்தரணி கீர்த்தி உடவத்தவை பதில் பொதுச் செயலாளராகவும் நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மீது கட்சி, அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது.
எவ்வாறாயினும், முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டைத் திருத்திக் கொள்ளவும், குறித்த தடை உத்தரவுக்கான உண்மைகளை உறுதிப்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான அன்றைய உத்தரவின் .போது குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.