இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க அயர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.
இதனை அயர்லாந்தின் பிரதமர் சைமன் ஹாரிஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் மிச்செல் மார்ட்டின் ஆகியோர் இன்று( 23 ) அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக போர் நடந்து வருகிறது.
ஹமாஸின் முக்கிய மையமான காசா மீது இஸ்ரேலிய ராணுவம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்குள்ள மக்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
நெதன்யாகுவின் படைகள் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இரு நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்த பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்குவதே தீர்வு என ஐரோப்பிய நாடுகள் நினைக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க அயர்லாந்து, ஸ்பெயின், ஸ்லோவேனியா, மால்டா ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் கடந்த வாரம் இது தொடர்பான அறிவிப்பு மே 21 அன்று வெளியிடப்படும் என்று கூறினார்.
அதேபோல், இம்மாத இறுதிக்குள் பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படுவது உறுதி என அயர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் மிச்செல் மார்ட்டின் கடந்த 17-ம் திகதி தெரிவித்தார். இதன் ஒரு கட்டமாகவே, இன்று அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பு நாடுகளில் 137 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன
பாலஸ்தீனத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவு கிடைத்தாலும், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் ஆதரவு கிடைக்கவில்லை.