மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் மாவட்ட இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று (22.05.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநட்டிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படி படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை, திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்களதேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது.
அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பொரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக்கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது.
அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பிமலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்து கொண்டு கட்டுமானப் பணியில் மேசனாக இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கின்றோம்.
வடக்கில் குறுந்தூர்மலை வெடுக்குநாறிமலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது.
மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.