அதிபர் தேர்தலுக்கு முன்னர் திடீர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என கடந்த வாரம் பல்வேறு தரப்பினர் வெளியிட்ட அறிக்கைகளினால் பங்குச் சந்தையில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாராந்த அமைச்சரவை மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது பதவிக் காலத்தை நீடிப்பதற்காகவோ அல்லது பொதுத் தேர்தலை நடாத்தவோ, அரசியலமைப்பை திருத்தும் திட்டம் எதுவும் ரணிலிடம் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தல் இவ்வருடம் நடைபெறும் என அதிபர் ரணில் தெளிவாக கூறியதாகவும், அதற்காக வரவு செலவுத் திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினர்.
ஜூன் 15 ஆம் திகதிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஊடகங்களில் வெளியாகி உள்ளதா என வினவிய போது, அந்த ஊடகங்களில் எந்த அடிப்படையும் இல்லை எனவும், அவ்வாறான விடயம் தொடர்பில் ரணில் அமைச்சரவைக்கு அறிவிக்கவில்லை எனவும் இது சிலரின் கனவு மட்டுமே என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.