சமீபகாலமாக நாட்டில் பொருளாதார சிக்கல்களினால் வாழ்வாதாரத்தை உயர்திக்கொள்ளும் நோக்கில் பல இளைஞர் யுவதிகள் வெளிநாட்டு வேலை வாய்ப்பை தேடும் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மட்டக்களப்பிலிருந்து ருமேனியா , கனடா , பிரான்ஸ் செல்லும் தரப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்பட்டுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பலரிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு அவர்களை சுற்றுலா விசாவில் அனுப்பி ஏமாற்றியது தொடர்பாக ஒரு மாதத்தில் 4 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் ஒரு போலி முகவர் கைது செய்து செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனவே போலி வெளிநாட்டு முகவர்கள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாகவும் விழிப்பாக செயற்படுமாறு இன்று செவ்வாய்க்கிழமை (30) மட்டக்களப்பு தலைமையக பொலிசார் கோரியுள்ளனர்.
இந்த நிலையில் வெளிநாட்டுக்கு வேலைதேடி வருபவர்களை சட்டவிரோத வெளிநாட்டு போலி முகவர்கள் கண்டறிந்து உங்களுக்கு 5 வருடவேலை அதிக சம்பளம் என இல்லாத பொய்களை கூறி அவர்களை வெளிநாடு செல்வதற்கு சம்மதிக்க வைத்து சுமார் 6 இலச்சம் ரூபா வரை வாங்கி கொண்டு அவர்களை சுற்றுலா விசாவில் மத்திய கிழக்கு நாடுகளான டுபாய் ,கட்டார் போன்ற நாடுகளுக்கு அனுப்புகின்றனர்.
அவர்கள் அங்கு சென்றதும் அவர்களை ஒருவர் அழைத்துச் சென்று ஒரு அறையில் எதுவிதமான வசதியுமில்லாமல் சுமார் 10 க்கு மேற்பட்டவர்களை தங்கவைக்கப்படுகின்றனர் இவர்களுக்கு போலி முகவரால் தெரிவிக்கப்பட்ட எந்தவிதமான வேலை எதுவும் இன்றி கைவிடப்படுகின்றனர்.
இவ்வாறு கைவிடப்பட்டவர்கள் மாதக்கணக்கில் தொழில் இல்லாது உணவு இன்றி இருந்துவரும் நிலையில் தங்கவைக்கப்பட்ட அறைக்கான வாடகை பணத்தை செலுத்த முடியாத நிலையில் அதன் உரிமையாளர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றியதும் நடு வீதியில் அநாதரவாக விடப்பட்டதாகவும்.
இந்த நிலையில் பல்வேறு கஸ்ரங்கள் மத்தியில் அங்கிருந்து இலங்கைக்கு திரும்பிவர உறவினர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் விமான சீட்டுக்கான ஒரு இலச்சத்து 40 ஆயிரம் ரூபா பணத்தை செலுத்தி அந்த விமான சீட்டை பெற்ற பின்னர் நாட்டை வந்தடைந்துள்ளதாக போலி முகவர்களால் பாதிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டவர்களிடம் மேற் கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது . இவ்வாறு பாதிக்கப்பட்ட 4 பேர் முறைப்பாடு செய்துள்ள நிலையில் சித்தாண்டியைச் சேர்ந்த போலி முகவர் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்நிலையில் நேற்று திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்த நீதவான் தொடர்ந்து 14 நாட்கள் விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டார் எனவும் 3 போலி முகவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே பொதுமக்கள் வெளிநாடு செல்வதாக இருந்தால் மட்டக்களப்பு பொது சந்தை கட்டிடத்திலுள்ள அரசாங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் சென்று தெரிவித்தால் அவர்கள் உங்களுக்கு உதவி புரிவார். எனவே இந்த போலி வெளிநாட்டு முகவர்கள் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் அவதானமாக செயற்படுமாறு பொலிசார் கேட்டுள்ளனர்.