மியன்மாரில் இணையவழி குற்ற முகாம்களில் சிக்கியுள்ள இலங்கையர்களையும், ரஸ்ய – உக்ரைன் போர் முனையில் சிக்கியுள்ள இலங்கை படையினரையும் மீட்கும் நோக்கில் மூன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாய்லாந்துக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டா, ஜே.சி. அலவத்துவல மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரை உள்ளடக்கிய தூதுக்குழுவே இன்று (27) அதிகாலை தாய்லாந்துக்கு சென்றுள்ளது.
இந்நிலையில், குறித்த குழுவானது பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கும் அவர்களை நாடு திரும்புவதற்கும் என இராஜதந்திரிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மூன்றாம் தரப்பினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளது.
இதன்போது, இந்த குழுவினர் மியன்மார் மற்றும் ரஸ்யாவில் தலா ஐந்து நாட்கள் தங்கியிருப்பார்கள்.
அதேவேளை, தமது பயணத்தின் போது, தாய்லாந்து மற்றும் மியன்மாரின் சங்க நாயக்க தேரர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகளையும் சந்தித்து மகாநாயக்க தேரர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களையும் கையளிக்கவுள்ளனர்.