இங்கிரிய நகரில் மருத்துவரின் சீட்டு இன்றி போதை தரக் கூடிய மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் இங்கிரிய நகரிலுள்ள மருந்துக் கடை உரிமையாளர் மற்றும் போதை மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரையும் இங்கிரிய பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய மருந்துக் கடை உரிமையாளர் ஒருவரும் இங்கிரிய தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிரிய நகரிலும் நகருக்கு அருகாமையிலுள்ள இரண்டு பிரதான பாடசாலைகளுக்கு போதைக்கு அடிமையான மாணவர்கள்வர்களுக்கு போதைமாத்திரைகள் விற்பனை செய்வதாக இங்கிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்றும் வரும் நிலையில் போதை மாத்திரைகளை வாங்க வந்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த நபரை கைது செய்து சோதனையிட்ட போது அவரிடம் இருந்து நன்கு சீல் வைக்கப்பட்ட 10 மற்றும் 5 மாத்திரைகள் அடங்கிய இரண்டு பொதிகள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பான விசாரணையின் போது சந்தேக நபர் நோய்க்காக மாத்திரைகளை வாங்கியதாக முதலில் தெரிவித்ததாகவும், பின்னர் தான் அதனை போதைக்காகவே மாத்திரைகளை பயன்படுத்துவதாகவும் தனது நண்பர்களுக்கும் கொடுப்பதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
சந்தேகநபரின் நடத்தை மற்றும் வாக்குமூலத்தில் மேலும் எழுந்த சந்தேகத்தின் பேரில், அதிகாரிகள் அருகிலுள்ள மருந்துக் கடைக்குள் நுழைந்தபோது, கடை உரிமையாளர் குழப்பமடைந்து ஒரு பையை மறைக்க முயன்றுள்ளார்.
பொலிஸார் குறித்த பையை சோதனையிட்ட போது அதில் ஒரே மாதிரியான பெயரில் இரண்டு வகையிலான 436 மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட கடையின் பெயரும் பையில் அச்சிடப்பட்டிருந்தது.
கடுமையான வலி நிவாரணி என அழைக்கப்படும் இந்த மருந்தை முறையான மருத்துவ சீட்டு இன்றி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் இங்கிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கு அமைய இங்கிரிய பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.