கொழும்பு மாநகரசபை அதிகார எல்லை பிரதேசத்தில் இருக்கும் ஆபத்துமிக்க மரங்களை அந்த இடத்திலிருந்து அகற்றிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் 27 ஆம் திகதி திங்கட்கிழமை இது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் 27 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1255.png)
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லைப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஆபத்தான மரங்களை இனம் கண்டு அங்கிருந்து அகற்றிவிட விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்க இருக்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கமைய கொழும்பு மாநகரசபையின் மேற்பார்வையின் கீழ் இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரை இந்த வேலைத்திட்டத்துக்கு ஈடுபடுத்தக் கலந்துரையாடப்பட்டது. இன்னும் ஒரு சில தினங்களில் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1256.png)
அதன் பிரகாரம் இனம் காணப்பட்ட ஆபத்தான நிலையில் இருக்கும் அனைத்து மரங்களையும் முழுமையாக அகற்றிவிடவும் கிளைகளை வெட்டி, மரத்தின் பாதுகாப்பு தன்மையை அதிகரித்துக்கொள்ள முடியுமான மரங்களை மேலும் பாதுகாத்துக்கொள்ள இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
மேலும் ஜனாதிபதியின் ஆலாேசனைக்கமைய முற்றாக நீக்கப்பட்ட மரங்கள் இருந்த இடங்களில் இடத்தக்கு பொருத்தமான, நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய, கட்டிடங்களுக்குப் பாதிப்பு இல்லாத புதிய மரங்களை நாட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1257.png)
குறிப்பாக இந்த காலப்பகுதியில் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் 19 மரங்கள் விழுந்திருப்பதாக எமக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அந்த மரங்களின் வேர்கள் தொடர்பில் எமக்கு ஆய்வு செய்ய வேண்டி ஏற்படுகிறது. இது தொடர்பாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துக்குத் தேவையான உபகரணங்களை வழங்கி, விஞ்ஞான ரீதியிலான ஆய்வை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என்றார்.