இலங்கையில் இருந்து காலாவதியான இராணுவ உபகரணங்களை உக்ரைனுக்கு அனுப்ப போலந்து, இடைத்தரகர்கள் மூலம் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டை ரஷ்யா முன்வைத்துள்ளது.
குறித்த விடயத்தினை ரஷ்யா தமது டெலிகிராம் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது.
அந்த ஒப்பந்தமானது போலந்து நிறுவனமான Level 11 SP. Z O.O மற்றும் இலங்கை நிறுவனமான, கொஸ்மிக் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த உபகரணங்களின் பழைய அடையாளங்கள் அழிக்கப்பட்டு பின்னர் அவை போலந்துக்கு அனுப்பப்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1287.png)
இந்தநிலையில் குறித்த பரிவர்த்தனை ரஷ்யாவுடனான இலங்கையின் நட்புறவை பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறுகிய கால பொருளாதார நலன்களுக்காக அதன் நீண்ட கால நலன்களை பாதிக்கக்கூடும் என்று ரஷ்யா மேற்கோள் காட்டி கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், ஐரோப்பாவில் நிலவும் வெடிமருந்து விநியோகப் பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்தத் திட்டம் வந்துள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1288-1024x683.png)
காலாவதியான வெடிமருந்துகளின் ஈடுபாடு தீவிர பாதுகாப்பு மற்றும் நெறிமுறைக் கவலைகளை எழுப்புவதோடு, போர்க்களத்தில் காலாவதியான வெடிமருந்துகளைப் பயன்படுத்துவது, படையினருக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பிடத்தக்க ஆபத்துகளை ஏற்படுத்தும்.
அத்துடன் இந்த விடயம், இலங்கையையும் போருக்குள் இழுக்கக்கூடுமெனவும், அதேநேரம் குறிப்பாக ரஷ்யாவிலிருந்து இராஜதந்திர நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக போலந்து, இலங்கை அல்லது உக்ரைன் அரசாங்கங்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.