ஆறு மாதங்கள் முதல் மூன்று வருடங்கள் வரையிலான வயதுடைய குழந்தைகளுக்கு மீண்டும் திரிபோஷா உற்பத்திக்கு சுகாதார அமைச்சு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
திரிபோஷவுக்குப் பதிலாக அரிசியில் புதிய போஷாக்கு உணவைத் தயாரிப்பது குறித்து லங்கா திரிபோஷா நிறுவனம் அவதானம் செலுத்துயள்ளது.
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆறு மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையான குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷவின் உற்பத்தியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியகலாநிதி அசேல குணவர்தன, பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தில் தெரிவித்தார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1353.png)
இதற்கமைய குறிப்பிட்ட காலப்பகுதியில் நாட்டில் போசாக்கு தேவைகள் இனங்காணப்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கு இந்தத் த்ரிபோஷவை நிபந்தனையுடன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற சிறுவர் ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினி குமாரி விஜேரத்ன தலைமையில் அண்மையில் (22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பிட்ட அளவை விட அதிகமான அஃப்லொடொக்ஸின் காணப்பட்டமையால் 06 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையான வயதுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவின் உற்பத்தி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக சுகாதாரத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1354.png)
குறித்த வயது எல்லையை உடைய குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அஃப்லொடொக்ஸின் அளவு 1ஐ விடக் குறைவாக இருக்க வேண்டியுள்ளபோதும், அத்தயாரிப்புக்களில் அதன் அளவு அதிகமாக இருந்தமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இருந்தபோதும் போசாக்குக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு த்ரிபோஷாவைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை இருப்பதால் 06 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையான வயதுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் த்ரிபோஷாவில் காணப்படவேண்டிய அஃப்லொடொக்ஸின் அளவை 5 வரை அதிகரிக்க முடியும் என்ற நிபந்தனையுடன் உற்பத்திக்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1355.png)
இதேவேளை, திரிபோஷாவிற்குப் பதிலாக அரிசியிலிருந்து மற்றுமொரு போஷாக்கான உணவை உற்பத்தி செய்வதற்கு தமது நிறுவனம் தயாராகவுள்ளதாக லங்கா திரிபோஷா நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தயாரிக்க அரைக்கும் இயந்திரம் தேவையெனவும், அதற்கு சுமார் 400 மில்லியன் ரூபா செலவாகுமெனவும் அதிகாரிகள் ஒன்றியத்தில் தெரிவித்தனர்.
எனினும் அதில் பாதி தொகையை இலங்கை அரசாங்கம் வழங்கினால் மீதிப் பணத்தை உலக உணவுத் திட்டம் வழங்கத் தயாராக இருப்பதாக லங்கா த்ரிபோஷ நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி, இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு மேலும் கொண்டுவரவுள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் திரிபோஷா உற்பத்திக்காக உயர்தர சோளத்தை பயிரிட வேண்டியதன் அவசியம் குறித்தும், த்ரிபோஷ உற்பத்தி காலம் வரை அந்த தரத்தை பேண செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நீண்ட நேரம் இங்கு கலந்துரையாடப்பட்டதாக குறிபிடப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் லங்கா த்ரிபோஷ நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.