இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டமையானது உள்நாட்டு, புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுநராக நிமிக்கப்பட்டு இன்றைய தினம் (01.06.2023) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யும் செந்தில் தொண்டமான் அவர்களின் வருகையை அரசியல் ஆக்கும் முயற்சியில் ஒரு சில அரச அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறிப்பாக செங்கலடி பொதுச் சந்தையில் அமைக்கப்பட்ட மீன் சந்தை கட்டிடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் இன்று பிற்பகல் 4 மணியளவில் திறந்து வைக்க உள்ளார். குறித்த திறப்பு விழா நிகழ்வுக்கு மக்கள் பிரதிநிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மிக முக்கியமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் பலரும் இதில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழ் ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும். அப்படி நியமிக்கப்பட்டால் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களை அவர் அரவணைத்துச் செல்வார், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்நின்று செயற்படுவார், மிக முக்கியமாக மாகாண சபை ஆட்சி மற்றும் சிங்கள ஆளுநர்களின் இனவாத செயற்பாடுகளால் விரக்தி அடைந்து இருக்கும் கிழக்கு மாகாண மக்களுடனும், கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை வாக்குகளை பெற்ற தமிழ் தேசிய கட்சிகளுடனும் நல் உறவை பேணி கிழக்கில் அரசியல் களப்பற்ற அதிகாரத் துஸ்பிரயோகம் இல்லாத ஒரு நல்லிணக்க நிர்வாகத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஏறாவூர் பற்று பிரதேச சபை நிர்வாகம் செயற்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.
செங்கலடி பொதுச் சந்தையில் அமைக்கப்பட்ட மீன் சந்தை கட்டிடத் திறப்பு விழாவிற்கு மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டமைக்கு காரணம் ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் அவர்களின் கட்சிசார் அரசியல் செயற்பாடுகளே என கூறப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக செயற்பட்ட மனோகணேசன் அவர்களினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரன் சந்தை கட்டிடம் அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்தது.
இவ்வாறான நிலையில் தற்போது நடைபெறும் குறித்த சந்தை கட்டிடத் திறப்பு விழாவிற்கு ஆளும் கட்சி அமைச்சர்களை மாத்திரம் முதன்மை படுத்தி அழைத்துள்ள ஏறாவூர் பற்று பிரதேச சபை நிர்வாகம் ஏனைய மக்கள் பிரதிநிதிகளை புறந்தள்ளியமையானது கிழக்கு மாகாண ஆளுநரை அரசியல் கட்சி சார்ந்தவராக காட்டுவதற்கா முயற்சியா? என்ற கேள்வி எழுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில ஆளும் கட்சி அமைச்சர்களும் அவர்களுக்காக பணியாற்றும் அரச அதிகாரிகளும் இவ்வாறான முயற்சிகளை செய்கின்றார்களா? என்ற கேள்வி எழுகிறது.