கடந்த 02 ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கார் நிறுத்தப்பட்டமைக்கு மாநகர சபையினால் மேலதிகமாக 50 ரூபாய் அறவிட்ட சம்பவம் தொடர்பில் பொதுமக்களால் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெண்ணொருவர் தனது காரை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நிறுத்தி விட்டு, காந்தி பூங்காவிற்குள் தனது பிள்ளைகளுடன் சென்றுள்ளார். சில மணிநேரம் கழித்து வீடு திரும்புவதற்காக காரின் அருகில் சென்ற வேளை அங்கு வந்த நபர் மாநகரசபையினால் காரிற்கு அறவிடப்படும் 50 ரூபாய் விட லொறி நிறுத்துவதற்கான கட்டணத்தை (100 ரூபாய்) அறவிட்டுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த பெண் நடந்த சம்பவத்தை கூறி காணொளியாக முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் எமது battinaatham ஊடகம் மட்டக்களப்பு மாநகர சபையை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் வினவிய போது, இவ்வாறான ஒரு நிலையில் பொது மக்கள் பற்றுச்சீட்டில் பொறிக்கப்பட்டுள்ள பணத்தை தவிர மேலதிகமான பணத்தை வழங்க வேண்டாம் எனவும், பாதிக்கப்பட்ட மக்கள் பற்றுச்சீட்டுடன் மாநகர சபைக்கு வந்து மேலதிக முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.