வருடாந்தம் ஜூன் 5ம் திகதி அனுட்டிக்கப்படும் சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மே 30 – ஜூன் 5 வரை சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு, பல நிகழ்ச்சிதிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
“நில மறுசீரமைப்பு, பாலைவனமாதல் மற்றும் வறட்சியை தாங்கும் தன்மை” எனும் தொனிப்பொருளை மையமாக கொண்ட சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் பிரதேச செயலக பிரிவிக்குட்பட்ட களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலய சூழலை மையப்படுத்தியதான “உயிர்ப்பல்வகைமை தினம்” எனும் விழிப்புணர்வு நிகழ்வு, விதைப்பந்து உருவாக்கம், மரநடுகை மற்றும் சிரமதான நிகழ்வு என்பன ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நிலைபேறான சுற்றாடலை உருவாக்கும் நோக்கிலும், களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் பெரிய குளத்தை சூழவுள்ள பிரதேசத்தினை சூழல் நேயமிக்க பிரதேசமாக மாற்றியமைக்கும் வகையிலும் திரு. றியாஸ் அஹமட் (உயிரியல் விஞ்ஞானத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் ) அவர்களால் “உயிர்ப்பல்வகைமை” எனும் தலைப்பிலான விழிப்புணர்வு கருத்துரை மேற்கொள்ளப்பட்டதுடன் விதைப்பந்து தயாரிக்கும் முறை தொடர்பாகவும் சைவமகாசபை அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு செய்முறை விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களால் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டதுடன், ஆலய வெளிச் சூழலில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், ஆலய பிரதிநிதிகள், அறநெறி பாடசாலை பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வினை களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலய நிருவாகத்தினர் மற்றும் சைவமகாசபை அறநெறி பாடசாலை நிர்வாகத்தினர் இணைந்து ஒழுங்கமைப்பு செய்திருந்தமை குறிப்பிடடத்தக்கது.