மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் கல்வி கற்று 2023ம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் அடிப்படையில் பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதி பெற்றுள்ள 102 மாணவர்களையும், பெற்றோர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் யூ.எல். மன்சூர் தலைமையில் நேற்றுமுன்தினம் (07) காலை 9.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் வைபவ ரீதியாக இடம்பெற்றது.
2023ம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் அடிப்படையில் மருத்துவம், பொறியியல், வணிகம், கலைபிரிவு உள்ளிட்ட அனைத்து துறைகளுக்குமாக பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதி பெற்றுள்ள சுமார் 102 மாணவர்களை அவர்களது பெற்றோர் சகிதம் மேடைக்கு அழைத்து பிரதம அதிதிகள் முன்னிலையில் பெற்றோர்களின் கரங்களினால் மாணவிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவம் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எம். ஜவாத், காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம். ஹக்கீம் உள்ளிட்ட கல்வியாளர்கள், பாடசாலை பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.